சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கீழ அம்பலசேரியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 46). பனையேறும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் சமத்துவபுரத்தில் வசிக்கும் ராமா் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்தது. அப்போது ராமர் தங்களது பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீராக குடிநீர் வரவில்லை என்று ஒப்பந்ததாரரிடம் முறையிட்டார்.
அப்போது அங்கு வந்த கணேசனுக்கும், ராமருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவில் கணேசன் அங்குள்ள ஆர்.சி. தெருவில் நின்றபோது, அங்கு வந்த ராமர் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து கணேசனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான ராமர் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடினர்.
இதற்கிடையே கணேசனை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். கணேசனின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து, கீழ அம்பலசேரி மெயின் ரோட்டில் உறவினர்கள், கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் காட்வின் ஜெகதீஷ்குமார் (சாத்தான்குளம்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம், கணேசனின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கணேசன் கொலை வழக்கு தொடர்பாக, ராமரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராமரின் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.