திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை வியாபாரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-03 14:03 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி செயல்பட்ட கடைகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அறநிலையத்துறை அனுமதியுடன் 84 கடைகள் செயல்படுகிறது. கோவில் வளாகத்தில் அனுமதியின்றி 18 கடைகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்றுமாறு கடைக்காரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ேநாட்டீஸ் வழங்கப்பட்டது. சமீபத்தில் கோவில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்ற பின்னரும் கடைக்காரர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தீக்குளிக்க முயன்ற வியாபாரிகள்

தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்றுவதற்காக செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் சென்றனர். இதையொட்டி கோவில் வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கோவில் வளாகத்தில் அனுக்கிரக மண்டபத்தில் அனுமதியின்றி செயல்பட்ட பேன்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் பிரபாகரன் (38), ஆறுமுகநயினார் (39) ஆகிய 2 பேரும் தங்களது உடலில் மண்எண்ெணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஜெயந்திநாதர் விடுதி அருகில் தள்ளுவண்டிகளில் செயல்பட்ட கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அங்குள்ள பொருட்களை அகற்றி கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் நடத்த இடம் வழங்க வேண்டும் என்று கண்ணீர்மல்க அதிகாரிகளிடம் முறையிட்டனர். 

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்