கோவில்பாளையத்தில் அதிமுக திமுக கோஷ்டி மோதல்

கோவில்பாளையத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கோஷ்டி மோதல் நடந்தது. எனவே இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;

Update: 2021-03-02 23:52 GMT
சரவணம்பட்டி,

கோவை கோவில்பாளையம் தேவம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதி லட்சுமி (வயது40). எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர். 

 இவரும், மரகதமணி என்பவரும் அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் வீட்டில் கட்சி தொடர்பான ஆலோசனை செய்து விட்டு அங்குள்ள தனியார் மஹால் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகரான பார்த்திபன், லோகேஸ்வரன் ஆகியோர் ஜோதிலட்சுமியை வழிமறித்து தகராறு செய்து, அவரிடம் இருந்து ஆவணங்களை பறித்து கிழித்து வீசினர். 

இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த நகர செயலாளர் தேவராஜ் சம்பவ இடத்துக்கு வந்து, பார்த்திபன், யோகேஸ்வரன் ஆகியோரை கண்டித்துள்ளார். 

இதன் காரணமாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, தேவராஜ், பா.ஜனதா கட்சியை சேர்ந்த தண்டபாணி, அ.தி.மு.க.வை சேர்ந்த சாரல் செந்தில், சக்திவேல் ஆகியோர் பார்த்திபன் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இது குறித்த தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்