பல்லடம் அருகே குப்பையில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்
பல்லடம் அருகே குப்பையில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டின் மேற்புறம் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம். ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வந்த போது, சிறிய சிறிய மூட்டைகளாக ரேஷன் அரிசி கிடந்துள்ளது. உடனே இதுகுறித்து பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் ரேவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்த சுமார் 70 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துச்சென்று நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பல்லடம் பகுதியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும், விலையில்லா அரிசி, தரமாக இல்லை என பொதுமக்கள் சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, பல்லடம் பகுதியில் உடுமலை ரோடு, மகாலட்சுமி நகர், சின்னையா கார்டன் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் ரேஷன் அரிசியை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதும் நடைபெறுகிறது. சிலர் சாலையோரங்களில் ரேஷன் அரிசியை கொட்டிவிடும் சம்பவங்களும் நடைபெறுகிறது. தங்களுக்கு தேவையில்லை என்றால், அந்த ரேஷன் அரிசியை வாங்காமலேயே தவிர்ப்பதை விட்டு விட்டு, அதனை வாங்கி சாலையோரங்களில் வீசி செல்வது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.