ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி செல்லும் சாலையில் அந்திவாடி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் பின்புறம் நேற்று மாலை 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது அருகில் புற்கள் எதுவும் எரியாத நிலையில், அவரது உடல் மட்டும் எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அவரை வேறு எங்கோ கொலை செய்து உடலை வந்து இங்கு வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கர்நாடகாவை சேர்ந்தவரா?
கர்நாடக மாநிலத்தில் கொலை செய்து உடல்களை ஓசூர் பகுதியில் வீசி செல்லும் சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. அதே போல ஓசூர் அருகே ஆனேக்கல் பகுதியில் யாரையும் கொலை செய்து உடலை எரித்து அந்திவாடி பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.