தலைவாசல் அருகே விபத்தில் மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு

தலைவாசல் அருகே விபத்தில் மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.;

Update: 2021-03-02 22:42 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே விபத்தில் மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.
விபத்தில் பலி
தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (வயது 60). இவர் கடந்த மாதம் 25-ந் தேதி தலைவாசலுக்கு சென்று விட்டு பெரியேரி கிராமத்திற்கு மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரியேரி ஆஞ்சநேயர் கோவில் அருகில் அடையாளம் தெரியாத வாகனம், பச்சமுத்துவின் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பிச்சமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயும் சாவு
இந்த நிலையில் மகன் இறந்த செய்தி கேட்ட அவரது தாய் நல்லம்மாள் (85) அதிர்ச்சி அடைந்தார். மேலும் நேற்று காலை 5 மணிக்கு அவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்