தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் சுல்தான்பேட்டையில் உரிமம் பெற்ற 5 பேரின் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சுல்தான்பேட்டையில் உரிமம் பெற்ற 5 பேரின் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Update: 2021-03-02 22:37 GMT
சுல்தான்பேட்டை

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து உள்ளது. 

எனவே கோவை மாவட்டத்தில், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள நபர்கள், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம், உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்குகள், படைக்கல சட்டப்படி ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

துப்பாக்கிகளை ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும். துப்பாக்கிகளை  ஒப்படைக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

 இதனால் மாவட்டம் முழுவதும் உரிமம் வாங்கி துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். 

இதன்பேரில் சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரகத்தில் துப்பாக்கி வைத்துள்ள 8 பேரில் 3 பேர் கோவை சுந்தராபுரம் தனியார் ஆயுத கிடங்கிலும், 2 பேர் கோவை ராம்நகரில் உள்ள ஸ்போர்ட்டிங் ஆர்ம் அலுவலகத்திலும் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கான ரசீது நகல்களை சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழங்கி உள்ளனர். 

இன்னும், 3 பேர் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டி உள்ளது. துப்பாக்கிகளை ஒப்படைத்தவர்களுக்கு தேர்தல் முடிந்தபின், தேர்தல் கமிஷன் அறிவிக்கும் நாட்களில் மீண்டும் அவர்களது துப்பாக்கிகள் வழங்கப்படும்.

மேலும் செய்திகள்