தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 3 சோதனை சாவடிகள்- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

Update: 2021-03-02 22:34 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 939 இடங்களில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 72 இடங்களில் உள்ள 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
சோதனை சாவடிகள்
சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரி என 2 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2 மாநில எல்லை சோதனை சாவடிகளும், 8 மாவட்ட சோதனை சாவடிகளும் உள்ளன. கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடைபெறவில்லை. எனவே அந்த மாநில எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பர்கூர் தட்டக்கரை, தாளவாடி எல்லக்கட்டை, புளிஞ்சூர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
பழங்குற்றவாளிகள்
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 92 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அவர்கள் முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். கூடுதலாக துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதேபோல் கர்நாடகா மாநில போலீசாரும் தமிழக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படலாம். இந்த தேர்தலில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் என சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டம் முழுவதும் பழங்குற்றவாளிகள் 873 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் 90 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

மேலும் செய்திகள்