பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு கோழிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளிப்பு
பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் கோழிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் தாமரைக்குளம் பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். மேலும் வாட்டர்கேன் வியாபாரமும் செய்து வருகிறார்.
இவர் தாமரைக்குளத்தை சேர்ந்த தனது உறவினரான ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதில் விஜயகுமார் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.
இந்தநிலையில் மீதி ரூ.10 ஆயிரத்தை கடந்த மாதம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த மாதம் பணம் கிடைக்காததால், விஜயகுமார் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 26-ந் தேதி தாமரைக்குளத்தில் சாலையோரம் உள்ள ஒரு பேக்கரி அருகே ஆட்டோவில் விஜயகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஜெயபிரகாஷ் மீதி பணத்தை கேட்டுள்ளார். அப்போது கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் விஜயகுமாரை ஜெயபிரகாஷ் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பொதுஇடத்தில் வைத்து கடனை கேட்டதால், மனவிரக்தி அடைந்த விஜயகுமார், தனது சரக்கு ஆட்டோவில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து நடுரோட்டில் வைத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்த பேக்கரிகடைக்காரர் விஜயகுமார் மீது ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். தீயை அணைத்த பின்னர் விஜயகுமாரின் சரக்கு ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அங்கு டாக்டர்கள் விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விஜயகுமார் கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விஜயகுமார் நடுரோட்டில் ஆட்டோவிலிருந்து பெட்ரோல் கேனை எடுத்து வந்து தீக்குளித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.