ஜாமீனில் வந்த ரவுடி தலை துண்டித்து கொலை
முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல், ஜாமீனில் வந்த ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்தது.
தஞ்சாவூர்;
முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல், ஜாமீனில் வந்த ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்தது.
தஞ்சையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரவுடி
தஞ்சை ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 21). ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள சாலையோர டிபன் கடைக்கு சென்றார்.அங்கு சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் மணிகண்டன் தனது நண்பர் ஒருவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரெட்டிப்பாளையம் சாலையில் சென்றபோது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து மணிகண்டனை வழிமறித்தனர்.
தலை துண்டிக்கப்பட்டு கொலை
அப்போது மணிகண்டனுக்கும், 5 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதுடன் அவரது வாயை பொத்தி மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்றனர். இதை பார்த்து மணிகண்டனுடன் நடந்து வந்தவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு மணிகண்டனை சிலர் தூக்கி செல்வதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரெட்டிப்பாளையம் சாலை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று போலீசார் பார்த்தனர். அப்போது மணிகண்டன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கோவில் முன்பு தலை
தலையை தேடி பார்த்தபோது அதே பகுதியில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சப்த கன்னியம்மன் கோவில் முன்புறம் கிடந்தது. மணிகண்டனை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்ற கும்பல், கொடூரமாக அவரை கொலை செய்து தலையை துண்டித்து அருகே உள்ள சப்த கன்னியம்மன் கோவிலில் முன்புறமும், உடலை அருகில் உள்ள தண்டவாளத்திலும் வீசிவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த முதல்கட்ட தகவல்கள் வருமாறு:-
ஜாமீனில் வெளியே வந்தார்
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிகண்டனுக்கும், ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த முத்துராமன் என்ற மற்றொரு ரவுடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் இணைந்து முத்துராமனை அரிவாளால் வெட்டினார்.
இந்த கொலை முயற்சி வழக்கில் 3-வது குற்றவாளியான மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்களில் கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
வழிமறித்து தாக்குதல்
இந்த நிலையில் வெட்டுக்காயம் குணம் அடைந்ததால் முத்துராமன் வேலைக்காக கோவைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முத்துராமன் நேற்று முன்தினம் மாலை தஞ்சைக்கு வந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு சாலையோர கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு மணிகண்டன் நடந்து செல்வதாக வந்த தகவல் கிடைத்ததால் முத்துராமன் தனது நண்பர்களுடன் வந்து மணிகண்டனை வழிமறித்து தாக்கியுள்ளார்.
இப்படியே விட்டு சென்றால் தம்மை பழிவாங்கி விடுவார் என கருதியவர்கள் அவரது வாயை பொத்தி, ரெட்டிப்பாளையம் ரெயில்வே தண்டாவளத்திற்கு தூக்கி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரது தலையை தனியாக துண்டித்து உடலை ரெயில்வே தண்டவாளத்திலும், தலையை சப்த கன்னியம்மன் கோவில் வாசல் முன்பாகவும் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
வாலிபர் சிக்கினார்
இதையடுத்து தனித்தனியாக கிடந்த உடல் மற்றும் தலையை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனை கொலை செய்த கும்பலை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சந்திரசேகரன், டேவிட் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
தப்பி ஓடியவர்கள் கோர்ட்டில் சரண் அடைய வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கோர்ட்டு பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொலையானவரும், கொலை செய்தவர்களும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.