சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7-ந் தேதி பூச்சொரிதல் விழா; முன்னேற்பாடுகள் தீவிரம்
வருகிற 7-ந் தேதி நடக்க உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
திருச்சி,
வருகிற 7-ந் தேதி நடக்க உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
பூச்சொரிதல் விழா
சக்தி தலங்களில் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 7-ந்தேதி பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவில் இணை ஆணையரும் செயல் அலுவலருமான கல்யாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னேற்பாடு குறித்து கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
குடிநீர் வசதி
பூச்சொரிதல் விழாவையொட்டி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அத்துடன் தற்காலிக மற்றும் மினி பஸ் நிலையங்களை அமைக்கவேண்டும். பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கவேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்காக பறிக்கப்பட்ட சாலையை செப்பனியிடவேண்டும்.
காவல்துறை
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் எண்ணிக்கையில் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். எனவே காவல்துறையினர் 7-ந் தேதி அதிகாலை முதல் 8-ந் தேதி மாலை வரை பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். கோவிலில் கூட்ட நெரிசலை சமாளிக்க, காவல் பணியில் குறைந்த பட்சம் 10 காவலர்கள் ஷிப்ட் முறையில் பணி நியமனம் செய்யவேண்டும்.
பூத்தட்டு ஊர்வலம்
வருகிற 7-ந் தேதி காலை 8 மணிக்கு கோவில் பூத்தட்டு கொடிமரம் அருகிலிருந்து ஊர்வலமாக யானையின் மேல் புறப்பாடாகும். அதற்கு இடையூறு ஏற்படா வண்ணம் வாகனங்களை பிரித்து பக்தர்களை மட்டும் கோவிலுக்குள் அனுப்புதல். தேவைக்கேற்ப ஒரு வழிப்பாதை அமைத்து கண்காணிப்பு கோபுரம் மூலம் ஷிப்ட் முறையில் கண்காணித்தல் மற்றும் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் பூச்சொரிதல் திருவிழாவின் போது ஒன்று திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்துவிட்டு குளிப்பதற்கு பெருவளைவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முக்கொம்பு மேலணை ரெகுலேட்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம் கோவில் பகுதி முழுவதற்கும் தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்தல் வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான அளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மருத்துவத் துறையினர் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் கடைவீதி, பஸ் நிலையம் அருகில், கோவில் திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் மருத்துவ முகாம் ஏற்படுத்துதல், தேவையான அளவில் ஆம்புலன்ஸ் வசதியும், இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைக்க வேண்டும்.
கூடுதல் பஸ்கள்
போக்குவரத்துத் துறை சார்பில் சமயபுரத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடுகள் செய்தல். தீயணைப்புத் துறையினர் சமயபுரம் காவல் நிலையம் அருகிலும், தெப்பக்குளம் அருகிலும் 2 தீயணைப்பு வண்டிகளை முதலுதவிக் குழுவுடன் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறையினர் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தனி நபர்களால் வழங்கப்பட்டும் அன்னதானம் முறையாக வழங்குவதையும், உணவகங்களில் உள்ள உணவு தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
கோவில் நிர்வாகம் தரப்பில் 7-ந் தேதி காலை 5 மணி முதல் 8-ந் தேதி மதியம் 12 மணி வரை கட்டணமில்லா தரிசனமாக பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். பூச்சொரிதலை முன்னிட்டு அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்கள் தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.