‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி
234 தொகுதிகளிலும் நடத்திய ‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி அடைந்தனர். அவர்களுக்கு 5-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.;
திருச்சி,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
மனு தாக்கல், வேட்பு மனுக்கள் பரிசீலனை, இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நாட்களில் அதிகாரிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக 234 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கனவே 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பொதுவாக முன்பெல்லாம் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதோடு சரி, தேர்வு எதுவும் நடத்தப்படுவது கிடையாது. ஆனால் இம்முறை முதன்முதலாக தேர்தல் ஆணையம் சார்பில் 234 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் ‘ஆன்லைன்' மூலமாக பரீட்சை நடத்தப்பட்டது.
இந்த பரீட்சையில் அவர்களுக்கு 20 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் சரியான பதில்களை அளித்த 162 அதிகாரிகள் மட்டும் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 72 அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேருக்கும் மீண்டும் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி முடிந்ததும் வருகிற 5-ந்தேதி மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் துணை கலெக்டர் மற்றும் உதவி கலெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.