திருச்சி, திருவெறும்பூரில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு
திருச்சி, திருவெறும்பூரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி,
திருச்சி, திருவெறும்பூரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
துணை ராணுவம்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் 95 பேர் திருச்சிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 140 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கொடி அணிவகுப்பு
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பை துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கொடி அணிவகுப்பு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி, கண்டோன்மெண்ட் ரோடு, எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா, அரசு மருத்துவமனை சாலை வழியாக சென்று, புதூர் ரோட்டில் முடிவடைந்தது.
இதுபோல் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 96 பேர் உட்பட 300 பேர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் நேற்று காட்டூர் பாலாஜி நகரில் இருந்து திருவெறும்பூர் வரை திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பொதுமக்களிடையே அச்சத்தை போக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நடத்த போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.