10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு
மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விருதுநகர்,
மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்பாடு
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மாவட்டத்தில் இதுவரை சுகாதாரப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
95 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 சதவீத போலீசாருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி
21 அரசு ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும். மேலும் 22 தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பாதிப்பு உடையவர்கள் வழக்கமாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாத்திரைகள் வாங்க வருவதுண்டு. அவர்களது விவரங்கள் அங்கு பணியாற்றும் செவிலியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
எனவே இவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை முறையாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசுஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தேர்தல் பணியாளர்கள்
வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள 2,370 வாக்குச்சாவடிகளிலும், 10 ஆயிரம் அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும்.
போதியளவில் மருந்து
மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான மருந்துகள் போதியளவில் கையிருப்பு உள்ளது.
தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போட விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.