திருப்பத்தூர் மாவட்டத்தில் கோழி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.2.90 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோழி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.2.90 லட்சம் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் காரில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடுக்கத்தூர் அடுத்த கொரட்டி பகுதியை சேர்ந்த கோழி வியாபாரி ராஜேந்திரன் (40) என்பதும், இவர் திருப்பத்தூருக்கு வியாபாரம் தொடர்பாக பணத்தை எடுத்து சென்றதும் தெரிய வந்தது.
ஆனாலும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்து வாணியம்பாடி தாலூகா அலுவகத்தில் ஒப்படைத்து, பின்னர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனைச்சாவடி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நரேஷ் குமார் (வயது 30) என்பவர் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அவருடைய காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.93 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரி காந்தியிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் பேராம்பட்டு கிராம சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக காரை நிறுத்திசோதனை செய்ததில் ரூ.90 ஆயிரம் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர் கதிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சண்முகசுந்தரம் (20) என்பது தெரியவந்தது.
காரில் இருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர், பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.