என்ஜினீயரிங் மாணவர் இழப்பீடு கேட்டு வழக்கு

என்ஜினீயரிங் மாணவர் இழப்பீடு கேட்டு வழக்கு

Update: 2021-03-02 19:52 GMT
மதுரை,மார்ச்
மதுரை மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 19.7.2020 அன்று எனது சகோதரரை சந்திக்க, பூதகுடி கண்மாய் கரையில் அமர்ந்திருந்தேன். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களில் ஒருவர், நான் வைத்திருந்த செல்போனை தருமாறு கேட்டார். ஆனால் நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், என்னுடைய வலது காலிலும், இடது கையிலும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். அந்த வழியாக வந்தவர்கள் என்னை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எனக்கு சிகிச்சை அளித்தனர். மறுநாள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். சரிவர சிகிச்சை அளிக்காததால் எனது காலில் வெட்டுப்பட்ட இடத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதற்காக மீண்டும் அங்கு சென்று சிகிச்சை அளிக்குமாறு கோரினேன். அதன்படி அங்கு அனுமதிக்கப்பட்டேன். எனது கால் காயத்தை டாக்டர்கள் பரிசோதித்தனர். அந்த இடத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது, உடனடியாக முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் எனது வலது காலில் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி நீக்கப்பட்டது.
இதனால் எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவனக்குறைவால் தான் எனது காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு உரிய இழப்பீட்டை வழங்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்