உடற்கல்வி ஆசிரியர் உள்பட பலரிடம் கடன் வாங்கி ரூ.49 லட்சம் மோசடி
உடற்கல்வி ஆசிரியர் உள்பட பலரிடம் கடன் வாங்கி ரூ.49 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 32). இவர் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கோவையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மாலதி (54) என்பவர் தனது மகளின் திருமண செலவுக்காக ரூ.10 லட்சம் கேட்டார்.
உடனே கார்த்திக்குமார் ரூ.10 லட்சத்தை மாலதியிடம் கொடுத்து உள்ளார். ஆனால் மகளின் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் அவர் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து கார்த்திக்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில், மாலதி தனது மகளை கல்லூரியில் சேர்க்க வேண்டும், கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி கார்த்திக்குமார் உள்பட 5 பேரிடம் ரூ.49 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
அத்துடன் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி மாலதியின் வீட்டிற்கு வந்து கேட்டதால் அவர் தலைமறைவாகிவிட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான மாலதியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த மோசடி தொடர்பாக மாலதி மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் புகார் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.