கூடலூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல்
கூடலூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
கூடலூர்,
சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் மற்றும் கர்நாடக எல்லை கக்கநல்லா உள்ளிட்ட எல்லைகளில் 6 பறக்கும் படை நிலைத்தன்மை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து நாடுகாணி சோதனைச்சாவடி வழியாக கூடலூர் நோக்கி வந்த லாரிகள் மற்றும் வாகனங்களை பறக்கும் படையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கூடலூர் சட்டமன்ற தேர்தல் அதிகாரி ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல ஊட்டியில் பறக்கும் அதிகாரிகள், ஆவணங்களின்றி காய்கறி வியாபாரி கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.4¼ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.