குமாரபாளையத்தில், கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு வினியோகம்: பிரதமர் மோடி உருவப்படத்துடன் 900 காலண்டர்கள் பறிமுதல் பா.ஜனதா பிரமுகர் மீது வழக்கு

குமாரபாளையத்தில் கோவில் திருவிழாவின் போது பிரதமர் மோடி உருவப்படத்துடன் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட 900 காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-03-02 19:13 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் கோவில் திருவிழாவின் போது பிரதமர் மோடி உருவப்படத்துடன் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட 900 காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் திருவிழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மாசிமாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதேபோல் குமாரபாளையம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன் கோவிலிலும் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மன்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடந்து வருகிறது. 
இதேபோல் நேற்றும் திருவிழாவையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
900 காலண்டர்கள் பறிமுதல்
இந்தநிலையில் காளியம்மன், மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு, அருகில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் வைத்து பா.ஜனதாவினர், பிரதமர் மோடி மற்றும் மாவட்ட செயலாளர் ஓம் சரவணா ஆகியோரின் உருவப்படம், தாமரை சின்னம் அடங்கிய தினசரி காலண்டர்களை வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பா.ஜனதாவினர், காலண்டர்களை வினியோகம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் பிரதமர் மோடி உருவம் பொறித்த 900 காலண்டர்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து குமாரபாளையம் நகர பா.ஜனதா துணைத்தலைவர் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
தி.மு.க.வினர் புகார்
இதனிடையே குமாரபாளையம் பகுதியில், அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறி எவர் சில்வர் தட்டுகள், டிபன் பாக்ஸ், பட்டு சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக, தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுகுறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்