தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கும் வகையில் நோட்டீசு அச்சடித்தால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை

தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கும் வகையில் நோட்டீசுகளை அச்சடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-03-02 19:12 GMT
நாமக்கல்:
தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கும் வகையில் நோட்டீசுகளை அச்சடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அச்சக உரிமையாளர்கள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-
மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951 பிரிவு 127ஏ-ன் கீழ், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குவது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர், உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி போன்றவை அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அரசியல் தொடர்புடைய சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்களை அச்சடிக்க வருபவர்களிடம் அடையாளம் காட்டக்கூடிய உறுதிமொழியை 2 சாட்சிகளின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அந்த உறுதிமொழி படிவத்தை அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரத்தின் 4 நகல்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை
மதம், சாதி மற்றும் இனம் தொடர்பாக ஆட்சேபனை எழும் விதத்திலும், சட்டத்திற்கு புறம்பாகவும், மொழி மற்றும் தனிப்பட்ட நபரை விமர்சிக்கும் வகையிலும் சுவரொட்டி, துண்டு பிரசுரம் உள்ளிட்ட நோட்டீசுகளை அச்சடிக்கக்கூடாது. அவ்வாறு அச்சடித்தால் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மற்றும் வெளியிடுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே அனைத்து அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி நேர்மையான மற்றும் அமைதியான தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அச்சக உரிமையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்