காரைக்குடி-மதுரை ரெயில் பாதை திட்டத்தை தொடங்க வேண்டும்
காரைக்குடியில் இருந்து மதுரை வரை ரெயில் பாதை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூர் பகுதி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருப்பத்தூர்,
சுற்றுலா தலம்
திருப்பத்தூரைச் சுற்றிலும் பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், வைரவன்பட்டி, பிரான்மலை, பட்டமங்கலம், குன்றக்குடி, செட்டிநாடு பங்களா, வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம், கொன்னையூர், திருப்பத்தூர் மருதுபாண்டியர்நினைவிடம், இரணியூர் கற்சிற்ப கோவில், இளையாத்தங்குடி நித்திய கல்யாணி அம்மன் கோவில், திருக்கோளக்குடி, ஒற்றைச் சனீஸ்வரர் பெரிச்சி கோவில், காட்டுவா பள்ளிவாசல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத்தலங்களும் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. அதோடு இதன் அருகே புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட திருமயம் கோட்டை உள்ளன.
அதுமட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி, ராமேசுவரம், கொடைக்கானல், கரந்தமலை, அழகர்கோவில், தஞ்சாவூர், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருப்பத்தூர் நகர் ஒரு மைய பகுதியாக இருந்து வருகிறது.
காரைக்குடி-மதுரை ரெயில் பாதை திட்டம்
இந்நிலையில் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளின் நீண்ட ஆண்டாக இருந்து வரும் கோரிக்கையானது காரைக்குடி-மதுரை ரெயில் பாதை திட்டம். இந்த திட்டத்தை அமைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில் இருந்து காரைக்குடி வரையும், காரைக்குடியில் இருந்து மதுரை வரையிலும் ரெயில் பாதை அமைக்க சர்வே நடத்தப்பட்டது.
பின்னர் அந்த பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் அதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலும் வரும் போது இந்த பகுதியில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ரெயில் பாதை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
அதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த திட்டத்தை பற்றி அடியோடு மறந்து விடுவதும் தொடர் கதையாகி விடுகிறது. இவ்வாறு காரைக்குடி-மதுரை, காரைக்குடி-திண்டுக்கல் ரெயில்வே பாதை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பல்வேறு பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். காரைக்குடி-மதுரை ரெயில் பாதை திட்டத்தை திருப்பத்தூர் பகுதி வாக்காளர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், மத்திய ரெயில்வே துறையை அணுகி இந்த பகுதியில் ரெயில் பாதை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் வாக்காளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பயண நேரம் குறையும்
இதுகுறித்து திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோவன் கூறியதாவது:-
மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக காரைக்குடி, திருச்சி வரை ரெயில் பாதை அமைக்கப்பட்டால் இந்திய நாட்டின் வட பகுதியில் உள்ள காஷ்மீர், ஜமுதா வரை சென்று வரலாம். அதேபோல் திருப்பத்தூரில் இருந்து மதுரை வரை உள்ள 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைத்தால் தெற்கே கன்னியாகுமரி வரை பயணிகள் சென்று வரலாம். இவ்வாறு ரெயில் பாதை அமைத்தால் அது பயணிகளின் பயண நேரத்தையும், பயணச் செலவையும் வெகுவாக குறைக்கும். எனவே இதுபோல் ரெயில்பாதை அமைத்து திருப்பத்தூர் மக்களின் நீண்ட கால கனவை நினைவாக்க ரெயில்வே துறை முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.