குடியாத்தம் அருகே, புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிப்பு
குடியாத்தம் அருகே புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம்வலசை கிராமத்தை ஒட்டியுள்ள செந்தூர்மலை அடிவாரப் பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் இருப்பதாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சில பொருட்களை கண்டுபிடித்ததாக கூறப்பட்டுவந்தது.
இந்தநிலையில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு செந்தூர் மலையடிவாரத்தில் ஆய்வு மேற்கொண்டு புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சில பொருட்களை கண்டுபிடித்தனர்.
தற்போது இரண்டாவது முறையாக சென்னை பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஜினுகோசி தலைமையில் 26 மாணவ-மாணவிகள் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி முதல் அப்பகுதியில் முகாமிட்டு அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அகழாய்வின் போது தென்னிந்தியாவில் இதுவரை கிடைக்கப் பெறாத பல அரிய பொருட்களான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-
இந்த பகுதியில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. அப்போதே அவர்கள் நன்கு அறிவியல் சார்ந்து நாகரிகமாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். மேலும் நாய் அல்லது நரியும் வளர்த்தது தெரிய வருகிறது. காரணம் அகழ்வாய்வின் போது மாட்டு எலும்பு மற்றும் தாடை பற்கள் கிடைத்துள்ளது. அதேபோல் நாயின் எலும்பும் கிடைத்துள்ளன.
மேலும் தென்னிந்தியாவில் எங்குமே இல்லாத சாம்பல் மேடு இப்பகுதியில் இருப்பது பெரிய ஆச்சரியமான விஷயமாகும். சாம்பல் மேடு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அப்போது வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் கற்களால் ஆன ஆயுதங்களை கொண்டு வேட்டையாடி உள்ளனர். அதற்கு அடையாளமாக சிறு சிறு கற்களாலான கருவிகள், வேட்டைக்கான கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இப்பகுதியில் சிறு சிறு குழுக்களாக மக்கள் வசித்து வந்திருப்பார்கள், அவர்கள் கால்நடைகளை வைத்து விவசாயம் செய்ததற்கான அடையாளங்களாக இவை உள்ளன. அப்பகுதியில் வாழ்ந்த பெண்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான அடையாளமாக சங்கால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பானை ஓடுகள், வேட்டையாட தேவையான கற்கால கருவிகள், மாடு மற்றும் நாய் வளர்த்ததற்கான அடையாளமாக எலும்புகள் கிடைத்தது. மேலும் விவசாயத்துக்கு தேவையான கருவிகள், இரும்பை உருக்குவதற்கான பொருட்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளது. அரசாங்கம் தேவையான நிதி ஒதுக்கினால் தொடர்ந்து இப்பகுதியில் அகழாய்வு செய்து கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் முதல் அனைத்து வகையான தகவல்களும் தெரியவரும் என தெரிவித்தனர்.