மதுரை,
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). இவர் ஒத்தக்கடை திருவாதவூர் சாலை அழகத்தப்பட்டி சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர் சுரேசை தாக்கி அவரிடம் இருந்து 1,500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அப்போது அந்தவழியாக ரோந்து வந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் புதுத்தாமரைப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் (35) என்பது தெரியவந்தது. பின்னர் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சதீஷ் மீது கடந்த 2005 முதல் 2020-ம் ஆண்டு வரை அண்ணாநகர், தல்லாகுளம், செல்லூர், ஊமச்சிக்குளம், ஒத்தக்கடை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.