குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆர்.டி.ஒ. முன்னிலையில் 505 ரவுடிகள் ஆஜர்

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆர்.டி.ஒ. முன்னிலையில் 505 ரவுடிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2021-03-02 17:54 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆர்.டி.ஒ. முன்னிலையில் 505 ரவுடிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றங்களை தடுக்க...
சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையொட்டி குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதேநேரம் ஜாமீனில் வெளியே நடமாடும் ரவுடிகளின் செயல்பாடுகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கொலை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 985 ரவுடிகளின் விவரங்கள் பெறப்பட்டன. அதில் ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்களை பிடித்து, ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தி உறுதிமொழி பெறும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.
505 பேர் சிக்கினர் 
இதையடுத்து குற்றத்தடுப்பு தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் போலீசாருடன் இணைந்து ரவுடிகளை தேடும் பணியில் இறங்கினர். அதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 505 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். இதைத் தொடர்ந்து 505 பேரையும், அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ. முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் ஓராண்டு காலத்துக்கு எந்தவித குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்று உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி பெறப்பட்டது.
அவ்வாறு எழுதி கொடுத்த நபர்கள், ஓராண்டு காலத்துக்குள் குற்றத்தில் ஈடுபட்டால் மீண்டும் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மீதமுள்ள நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்