சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.;
திருப்பூர்
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பெறப்படும். வருகிற 20-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22-ந் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது.
கலெக்டர் ஆய்வு
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட உள்ள அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவண மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், ஆர்.டி.ஓ. ஜெகநாதன், தாசில்தார்கள் முருகதாஸ் (தேர்தல்), சுந்தரம் (தெற்கு), ரவீந்திரன் (கலால்) உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.