பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், வெள்ளியானை, தங்ககுதிரை, தந்தப்பல்லக்கு, வெள்ளிகாமதேனு ஆகிய வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்திற்கு பத்மசால சமூகத்தினர் பொட்டும், காரையும் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7.50 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையில் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். திருக்கல்யாணத்தை செல்வசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் முறை பண்டாரங்கள் நடத்தினர்.
இதில் பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து வந்தனர். இதற்கிடையே திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது.