புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. தர்பூசணிகள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2021-03-02 17:20 GMT
புதுக்கோட்டை:
சுட்டெரிக்கும் வெயில்
புதுக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவம் தவறி பருவமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. அதிகாலை நேரத்தில் சில இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. 
அதேநேரத்தில் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம். தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ள நிலையில் கோடைகாலத்தில் வெயில் எப்படி இருக்குமோ? என நினைத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  
தற்போதைய வெயில் தாக்கத்தில் இருந்து தங்களது சருமமேனியை பாதுகாக்க சிலர் குடைகளை பிடித்தப்படி சாலையில் நடந்து செல்கின்றனர். பெண்கள் சிலர் துப்பட்டாவால் தலையை மூடியபடியும், தலை, முகம், கைகள் முழுவதையும் மறைத்துக்கொள்ளும்படியும் துணிகளையும், உறைகளையும் அணிகின்றனர்.
தர்பூசணி விற்பனை
வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தாகத்தை தணிக்க தர்பூசணிகளை வாங்கி பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர். தற்போது தர்பூசணி வரத்தும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சாலையோரம் ஆங்காங்கே தர்பூசணிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. 
தர்பூசணி பழத்தை துண்டு, துண்டாகவும் வெட்டி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப அவற்றை வாங்கி செல்கின்றனர். இதேபோல உடல் வெப்பத்தை தணிக்க கூடிய பழ வகைகளை வாங்கியும் சாப்பிட தொடங்கி உள்ளனர். பழச்சாறு, இளநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. சாலையோரம் ஆங்காங்கே இளநீர்விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
மழையில் பாதிப்பு
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தர்பூசணி விற்பனையும் பாதித்தது. அதனால் விவசாயிகள் பலர் தர்பூசணிகளை பறிக்காமல் செடியிலேயே விட்ட அவலமும் இருந்தது. தற்போது பருவம் தவறிய மழையில் தர்பூசணி விளைச்சல் சற்று பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இருப்பினும் வெளிமாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு தர்பூசணிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசணி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையாகுகிறது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்