வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
தேனி:
பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், தென்கரை, தாமரைக்குளம், வடபுதுப்பட்டி, அன்னஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர், மின்சார வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாய்தளம் சேதம் அடைந்து இருந்தது. மேலும் செடிகள், புற்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது.
அவற்றை சுத்தம் செய்வதுடன், சாய்தளத்தை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சினேகா, தாசில்தார் இளங்கோ மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.