ஆம்புலன்சில் கொண்டு வந்த ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர

Update: 2021-03-02 16:31 GMT
வேதாரண்யம்:
 இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
கடல் வழியாக கடத்தல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க நாகை கியூ பிரஞ்ச் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த கண்காணிப்பையும் மீறி கஞ்சா மற்றும் தங்கம் கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் இருந்து  இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிராஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன், நாகை கியூ பிரஞ்ச் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார் நேற்று தோப்புத்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
ஆம்புலன்சில் கஞ்சா பொட்டலங்கள்
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. மாறாக, ஆம்புலன்சில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ்சில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை அயனாவரம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 46)், மகேந்திரன்(24), வினோத்(26), சுந்தர்(36) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா பொட்டலங்களை சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது.
ரூ.3 லட்சம் மதிப்பு
மொத்தம் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா ஆம்புலன்சில் இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்சையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு நமது நாட்டில் ரூ.3 லட்சம் என்று தெரிவித்த போலீசார், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
உடனுக்குடன் நடவடிக்கை
உயிர்காக்க பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு நூதன முறையில் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
இந்த நிலையில் பல கஞ்சா வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதால் தான் தொடர்ந்து கடத்தல் நடைபெறுகிறது. எனவே உடனுக்குடன் போதை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தால் கடத்தல் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்