உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் பறிமுதல் கடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் பறிமுதல்

Update: 2021-03-02 15:33 GMT
கடலூர், 
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு, பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் வட்டார புள்ளியியல் அலுவலர் நாராயணன் தலைமையிலான பறக்கும் படையினர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 90 விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் இருந்தன. இதை பார்த்த பறக்கும் படையினர், காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலம் ஹரிப்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 52) என்பதும், ஆந்திராவில் இருந்து புதுச்சேரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு விலை உயர்ந்த பட்டுச்சேலைகள் கொண்டு வந்ததும், பிறகு அந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சேலைகள் வேண்டாம் என்று கூறி விட்டதால், சேலத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு கடலூர் வழியாக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இருப்பினும் சேலைகள் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 90 பட்டுச் சேலைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கடலூர் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பலராமனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்