அரசியல் துண்டு பிரசுரங்களை அச்சடித்தால் குற்றவியல் நடவடிக்கை
அனுமதி பெறாமல் அரசியல் துண்டு பிரசுரங்களை அச்சடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சக உரிமையாளர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களில் அச்சடிக்கப்படும் அரசியல் கட்சிகள் தொடர்புடைய விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மற்றும் இதர வகைகளில் அச்சடிக்கப்படம் ஆவணங்கள் ஆகியவைகளில் அச்சகத்தின் பெயர், முகவரி (தொலைபேசி எண்ணுடன்) மற்றும் வெளியிடுபவரின் விவரங்களுடன் பிரசுரிக்க வேண்டும்.
எச்சரிக்கை
மேலும் அச்சடிப்பதற்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்புதல் பெற வேண்டும். தவறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் ஒவ்வொரு அச்சகத்திலும் அனுமதி பெற்றே விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் அச்சடித்து தரப்படும் என்ற அறிவிப்பு நோட்டீசை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.