கொள்ளையடிக்கும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்ல மாட்டேன்
கொள்ளையடிக்கும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்ல மாட்டேன்கொள்ளையடிக்கும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்ல மாட்டேன் என்று 25 இடங்களில் கைவரிசை காட்டிய பொன்ராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
சுல்தான் பேட்டை,
சூலூர், சுல்தான்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கொடைக்கானல், தாராபுரம், காங்கேயம் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிய தேனி மாவட்டம் வெங்கலா நகரைச் சேர்ந்த பலே ஆசாமி பொன்ராஜ் (44) நேற்று முன்தினம் கோவை அருகே போலீசாரிடம் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுல்தான்பேட்டை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக, பொன்ராஜிடம் போலீசாரிடம் துருவிதுருவி விசாரணை நடத்தியபோது ருசிகரமான தகவல் கிடைத்தது. கைதான பொன்ராஜ் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சூடம் கொழுத்தி சாமி கும்பிடுவேன்
எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் அல்லிநகரை அடுத்த வெங்கலா நகர், எனக்கு 2 மனைவிகள், 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக திருட்டுதான் எனது தொழில். இன்று தொழில் அமோகமாக இருக்கவேண்டும். திருட்டின் போது யாரிடமும் சிக்கிவிடக்கூடாது என வீட்டில் பூஜை அறையில் சூடம் ஏற்றி, ஊதுபத்தி கொழுத்தி, சாமி கும்பிட்டுவிட்டுதான் வெளியே வருவேன்.
வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திருட்டு தொழிலில் ஈடுபடுவேன். தொழிலுக்கு ஊரில் இருந்து பஸ்சில் தான் செல்வேன். திருட முடிவு செய்த ஊர்களுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி கொள்வேன். குறிப்பட்ட அந்த முக்கிய ஊர் அல்லது கிராமங்களில் வழி போக்கன் போல் நடந்து சென்று 2,3 முறை நோட்டம் விடுவேன்.
குடிநீர் பாட்டிலுடன் சாப்பாடு
இதையடுத்து அதிகாலை நேரத்தில் வீட்டின், பூட்டை தேங்காய்மட்டை உரிக்கும் கூர்மையான கம்பியால் உடைத்து உள்ளே சென்று திருடிவிட்டு நைசாக தப்பி விடுவேன்.
திருடிய நகை, பணம் ஆகியவற்றை உறவினர்களிடம் பத்திரமாக வைத்து இருக்க கொடுத்து வைப்பேன். எப்பொதும் திருட போகும் இடத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் பிற வாகனங்களை எடுத்துச் செல்ல மாட்டேன். முடிந்தவரை செல்போனும் எடுத்து செல்லமாட்டேன்.
திருட முடிவு செய்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என பகல் நேரங்களில் பார்த்து உறுதி செய்து கொள்வேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.