சமூக வலைத்தளம் மூலம் வாலிபருடன் காதல்: திருமணத்திற்கு மறுத்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

கந்திகுப்பம் அருகே சமூக வலைத்தளம் மூலம் காதலித்த வாலிபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-02 06:27 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் ஷாயின்ஷா (வயது 23). இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நாமக்கல் மாவட்டம் மருர்ப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி சத்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சத்யா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் சமூக வலைத்தளம் மூலமாக சத்யாவும்,  ஷாயின்ஷாவும் காதலித்து வந்துள்ளனர். சத்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி  ஷாயின்ஷாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 19-ந் தேதி நாமக்கல்லில் இருந்து சத்யா குருவிநாயனப்பள்ளி வந்துள்ளார். அவர் காதலனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். 

விஷம் குடித்து தற்கொலை

ஆனால் ஷாயின்ஷா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா குருவிநாயனப்பள்ளி பஸ்நிலையம் அருகில் விஷம்  குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து சத்யாவின் அண்ணன் ராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ராஜா, கிருஷ்ணகிரி வந்து சத்யாவை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜா கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து வாலிபர் ஷாயின்ஷாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்