டாஸ்மாக் கடையில் தகராறு: பெயிண்டரிடம் ரூ.2 ஆயிரம் பறித்த வாலிபர் கைது

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரிடம் ரூ.2 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் கைது ெசய்தனர்.

Update: 2021-03-02 00:58 GMT
ஈரோடு
சிவகிரி கோட்டை புதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). பெயிண்டர். இவர் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி இரவு மூலப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சுரேஷ்குமார் வரிசையில் நின்றிருந்தார். அப்போது 3 பேர் வரிசையில் நிற்காமல் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தனர். இதைப்பார்த்த சுரேஷ்குமார் அவர்களை வரிசையில் நிற்கும்படி கூறினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேரும் தகாத வார்த்தையால் பேசி சுரேஷ்குமாரை தாக்கினார்கள். மேலும், அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த பழனியப்பனின் மகன் உமாரமணன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்