பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் விழா: சிலைக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு- விடிய விடிய நீண்ட வரிசையில் காத்து நின்றனர்

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழாைவயொட்டி கருவறையில் உள்ள அம்மன் சிலைக்கு பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் காத்து நின்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.;

Update: 2021-03-02 00:57 GMT
பவானி
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழாைவயொட்டி கருவறையில் உள்ள அம்மன் சிலைக்கு பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் காத்து நின்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.  
செல்லியாண்டி அம்மன் கோவில்
பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். 
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 23-ந் தேதி கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். 
புனித நீர் ஊற்றி வழிபாடு
கருவறையில் உள்ள அம்மன் சிலைக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனுக்கு தேன், இளநீர், திருமஞ்சனம் ஆகியவற்றை ஊற்றி வழிபட்டனர். 
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வந்து புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். 
சேறு பூசும் விழா
முக்கிய  நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நாளை (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. இதையொட்டி பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை அம்மன் கோவிலில் இருந்து படைக்கல பூசாரி படைக்கலத்தை எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குதிரையை அம்மனாக பாவித்து புனித நீர் ஊற்றி அழைத்து வருவார்கள். அப்போது சாலையின் இருபுறங்களிலும் தேங்கி உள்ள தண்ணீரில் மண்ணை குழப்பி சேறு ஆக்குவார்கள். பின்னா் அந்த சேற்றை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுடைய உடலில் பூசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பவானியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி போலீஸ் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் பவானியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் (பவானி), வினோதினி (அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), ரவி (அந்தியூர்), கதிர்வேலு (சித்தோடு) உள்பட 25 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். 
போக்குவரத்து மாற்றம்
இந்த கூட்டத்தில், ‘சேறு பூசும் விழாவையொட்டி பவானி நகர பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்வது,’ என முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி மேட்டூர், தர்மபுரி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஊராட்சிக்கோட்டை, தொட்டிபாளையம், ஜம்பை தளவாய்ப்பேட்டை வழியாக காலிங்கராயன்பாளையம் வந்து ஈரோட்டுக்கு செல்ல வேண்டும். ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பவானி பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும். அந்தியூர், ஆப்பக்கூடல் ஆகிய பகுதியில் இருந்து பவானி வரும் வாகனங்கள் அனைத்தும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகம் அருகே திருப்பி விடப்படும். சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பவானி வரும் வாகனங்கள் அனைத்தும் லட்சுமி நகர் பகுதியில் திருப்பி விடப்படும். நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பவானி நகரத்துக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்