தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி 2 பேர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கை தொடர்பாக 2 பேர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தர்மபுரி,
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்கள் மனுக்களை போட்டனர்.
இந்த நிலையில் அரூர் அருகே உள்ள மாம்பாடி கிராமத்தை சேர்ந்த சாக்கம்மாள் (வயது 70) என்பவர், தனது மகன், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார். அங்கு மூதாட்டி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் மூதாட்டி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணை
அப்போது தனக்கு விவசாய நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.
இதேபோல் ஜெர்தலாவ் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் நில பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும், ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள், கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்தை திருப்பித்தர கோரியும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.