மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் திருட்டு
பொள்ளாச்சியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவது போன்று நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் திருடிய மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவது போன்று நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் திருடிய மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி
பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டி சேரன் நகரை சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 65).
இந்த நிலையில் மகாலட்சுமி தனது கணவருடைய ஓய்வூதிய தொகையை எடுப்பதற்கு பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அங்கு எந்திரத்தில் பணத்தை எடுக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி பணத்தை எடுத்து தருவதாக கூறி, அவரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த ஆசாமி அவரிடம் ரகசிய குறியீட்டு எண்ணை எந்திரத்தில் பதிவு செய்யுமாறு கூறினார். இதை நம்பி மகாலட்சுமி ரகசிய எண்ணை எந்திரத்தில் பதிவு செய்தார். ஆனால் பணம் வரவில்லை. அதற்குள் அந்த ஆசாமி தன்னுடைய ஏ.டிஎம்.
கார்டை அவரிடம் கொடுத்து விட்டு, மகாலட்சுமியின கார்டை எடுத்து கொண்டு நைசாக சென்றுவிட்டார்.
போலீசார் விசாரணை
இதற்கிடையில் மகாலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
கார்டை எடுத்து சென்ற மர்ம ஆசாமி வேறொரு ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் மகாலட்சுமியிடம் கொடுத்த ஏ.டி.எம். கார்டை வைத்தும், பணம் திருடிய மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.