தர்மபுரி, பாலக்கோட்டில் துணை ராணுவ வீரர்கள்-போலீசார் கொடி அணிவகுப்பு
தர்மபுரி, பாலக்கோட்டில் துணை ராணுவ வீரர்கள்- போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் 91 பேர் தர்மபுரி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்கள், தாலுகா போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 250 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு தர்மபுரியில் நேற்று நடைபெற்றது.
முக்கிய வீதிகளில்...
தர்மபுரி வள்ளலார் திடலில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார், சப்-கலெக்டர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கொடி அணிவகுப்பு நேதாஜி பைபாஸ் ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. சட்டசபை தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பொதுமக்களிடையே அச்சத்தை போக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நடத்த போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பாலக்கோடு
பாலக்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பாலக்கோட்டில் இந்த அணிவகுப்பை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலக்கோடு ஸ்தூபி மைதானம், பஸ் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ராணுவவீரர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.