சேலத்தில் 3 சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு

சேலத்தில் தேவாலயத்துக்கு செல்வதாக கூறி சென்ற 3 சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-01 22:19 GMT
சேலம்:
சேலத்தில் தேவாலயத்துக்கு செல்வதாக கூறி சென்ற 3 சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9-ம் வகுப்பு மாணவிகள்
சேலம் அன்னதானப்பட்டி கருவாட்டுமண்டி முருகன் நகரை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் 2 பேர் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமியும் தோழிகள் ஆவர்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி தோழிகளான அவர்கள் 3 பேரும் தங்களது வீடுகளில் இருந்தவர்களிடம் அதே பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றனர். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சிறுமிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தனிப்படை போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் 3 சிறுமிகளின் பெற்றோர்களும் இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான சிறுமிகளை விரைவில் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் கடத்தப்பட்டார்களா? அல்லது எங்கு சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சிறுமிகள் குடியிருக்கும் மற்றும் தேவாலயம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். சேலத்தில் 3 சிறுமிகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்