கோழிக்கழிவுகள் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம்
கேரளாவில் இருந்து ராதாபுரம் பகுதிக்கு கோழிக்கழிவுகள் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வடக்கன்குளம், மார்ச்:
ராதாபுரம் பகுதிக்கு உட்பட்ட இருக்கன்துறை, செட்டிகுளம், நக்கனேரி, கூடங்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி இறைச்சி கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நேற்று காலையில் கேரளா பதிவு எண் கொண்ட மீன் கொண்டு செல்லும் குளிர்பதன லாரியில் சுமார் 3 டன் அளவிலான கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டது. அந்த லாரி செட்டிகுளம் விலக்கு அருகே வரும்போது அதன் பின்பகுதி உடைந்து அதில் இருந்த கழிவுகள் ரோட்டில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீச தொடங்கியது. டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தினார். தகவல் அறிந்து அங்கு வந்த பழவூர் போலீசார் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சுகதாரத்துறை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி, லாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கழிவுகளை ஊரல்வாய்மொழியில் உள்ள எலும்பு அரவை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.