நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வாகன சோதனை செய்து வருகிறார்கள். இதை கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார். அவர், பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம், மேலப்பாளையம் கருங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த வாகன சோதனையை ஆய்வு செய்தார். வாகன சோதனையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 18004258373 மற்றும் 1950 ஆகிய எண்கள் மூலம் வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையாளர்) சுகன்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், தாசில்தார்கள் மோகன், லட்சுமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.