திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-01 19:52 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அரசு மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு அறிவித்த உணவு பட்டியல்படி கொரோனா நோயாளிகளுக்கு தினமும் காலை உணவு, மிளகு பால், கசாயம், மதிய உணவு, கசாயம், இரவு உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) அரசு அறிவித்த உணவு பட்டியல் படி பேக்கிங் செய்யப்பட்ட உணவு தங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த உணவு வழங்கப்படவில்லை. சாதாரண உணவுகளே வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்டால் எங்களுக்கு தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அதனை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதை போல் உணவு வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து பேசிய மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் உடனடியாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த நோயாளிகள் தங்களின் வார்டுக்கு திரும்ப சென்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்