ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2021-03-01 18:49 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் 14 துறைகள் உள்ளன. இந்த கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று பெற்றுள்ளது. 
இந்தநிலையில் கல்லூரியில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதி இல்லை என்றும், குடிநீர், வகுப்பறை வசதிகள் இல்லை எனவும், கல்லூரி வளாகம் தூய்மையாக வைக்கப்படவில்லை, கல்வி உதவித்தொகை பலருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரிக்கு வெளிப்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மாணவர்கள் பலர் பஸ்சுக்காக காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. போதுமான நிழற்கூடங்கள் இல்லை. இத்தகைய குறைகளை போக்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 
மாணவ, மாணவிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் மணிமேகலை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் 15 நாட்களுக்குள் குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
=========

மேலும் செய்திகள்