தோகைமலை அருகே சுகாதார நிலைய செவிலியருக்கு அரிவாள் வெட்டு

சுகாதார நிலைய செவிலியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-03-01 18:36 GMT
தோகைமலை
செவிலியர்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சத்யா (வயது 42). இவர் பி.உடையாபட்டி துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.  இந்தநிலையில், நேற்று வழக்கம்போல், சத்யா பணியை முடித்து கொண்டு காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாராந்திர அறிக்கை கொடுப்பதற்காக தனது ஸ்கூட்டரில் தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டி-காணியாளம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 
அரிவாள் வெட்டு 
அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் சத்யாவை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதில் சத்யாவிற்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 
மர்மநபருக்கு வலைவீச்சு 
பின்னர் வெட்டுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்யாவை வெட்டி விட்டு தப்பியோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்