வேளாங்கண்ணியில், கடலில் மூழ்கி தொழிலாளி சாவு
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ராட்சத அலையில் சிக்கிய 3 பெண்களை காப்பாற்றி விட்டு அவர் தன்னுயிரை நீத்துள்ளார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ராட்சத அலையில் சிக்கிய 3 பெண்களை காப்பாற்றி விட்டு அவர் தன்னுயிரை நீத்துள்ளார்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் மனோஜ்(வயது 25). டைல்ஸ் போடும் தொழிலாளியான இவர் தனது உறவினர்கள் 11 பேருடன் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
பின்னர் மனோஜ் மற்றும் உறவினர்களான செல்வம் மனைவி சாந்தி(45), சுரேஷ் மனைவி கீர்த்தி(25), பிரான்சிஸ் மனைவி சுருதி(23) ஆகியோர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை சாந்தி, கீர்த்தி, சுருதி ஆகிய 3 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
கடலில் மூழ்கி சாவு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் அருகில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் 3 பெண்களையும் கடலுக்குள் இருந்து மீட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் கடலுக்குள் மூழ்கி மாயமானார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை நீண்ட நேரம் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்கு பிறகு மனோஜ் உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி கடலோர காவல்படையினர் மனோஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பெண்களை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்தார்
ராட்சத அலை இழுத்து சென்றதால் மயக்கம் அடைந்த சாந்தி, கீர்த்தி ஆகிய இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மனோஜுக்கு ஜெர்சி என்ற மனைவியும், ஜகா என்ற 7 மாத குழந்தையும் உள்ளனர்.
ராட்சத அலையில் சிக்கிய 3 பெண்களை காப்பாற்றி விட்டு மனோஜ் தன்னுயிரை நீத்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.