ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

கம்பம் பஸ் நிலையத்தில் தகராறில் டீக்கடை தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-03-01 17:12 GMT
தேனி:

டீக்கடை தொழிலாளி சாவு
கம்பம் நந்தகோபால் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு இவர் கம்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். 

அப்போது கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த ஜாபர்அலி மகன் ஆட்டோ டிரைவர் அஜய் என்ற முகமது அல்ஹசீம் (28) என்பவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் நின்று கொண்டு இருந்தார். அவர் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கி வருமாறு கூறினார். 

அனால், அவர் வாங்கி வர மறுத்தார். இதனால், அவரை அஜய் தாக்கி கீழே தள்ளிவிட்டு அவருடைய மார்பில் தாக்கினார். இதில் காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மைத்துனர் மகேந்திரன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் அஜய், அவருடைய நண்பர்களான சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மணிகண்டன் (29), நாட்டுக்கல் தெருவை சேர்ந்த அரவிந்த் ஆகிய 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்    வெள்ளைச்சாமி ஆஜராகி வாதாடினார்.

10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் 27 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் தரப்பில் 16 சான்று ஆவணங்களும், 2 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி ரவிச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த சம்பவம் கொலையாகாத இறப்பை விளைவிக்கும் குற்றம் என்று நீதிபதி குறிப்பிட்டார். 

அதன்படி, இந்த வழக்கு இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு 2-ன் கீழ் மாற்றப்பட்டது. அதில், அஜய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

மேலும் இந்த வழக்கில் இருந்து அரவிந்த், மணிகண்டன் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

உயிரிழந்தவரின் மனைவி கோமதி சட்ட உதவி மையத்தில் மனு அளித்து அரசு தரப்பில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து அஜய்யை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்