ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2021-03-01 16:42 GMT
கள்ளக்குறிச்சி 

ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஸ்ரீகாந்த்(கள்ளக்குறிச்சி), சரவணன்(உளுந்தூர்பேட்டை), ராஜாமணி(ரிஷிவந்தியம்), ராஜவேல்(சங்கராபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசியதாவது:-

ரூ.50 ஆயிரத்துக்கு மேல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 5,58,394 ஆண் வாக்காளர்கள், 5,55,371 பெண்வாக்காளாகள், 211 இதர வாக்காளர்கள் என மொத்தம் 11,13,976 வாக்காளர்கள் உள்ளனர். 1,569 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களை எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ வெவ்வேறு சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றை தூண்டுகிற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அனுமதி இல்லை

மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. அரசியல் கட்சியினர் காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பிறகும் ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை. அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள், காகிதங்கள் ஒட்டவோ, பேனர்கள் வைக்கவோ கூடாது.  அரசியல் கட்சியினர் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தல் பணிக்குழுக்களாக நியமிக்கக்கூடாது எனவும், தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். 

ஒத்துழைக்க வேண்டும்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும் முழுமையாக பின்பற்றி தேர்தல் நல்ல முறையிலும், எந்தவித குழப்பங்கள் இல்லாமலும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அப்பாவு, ஸ்டாலின்மணி, கஜேந்திரன், நாராயணன், ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்