குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

கூடலூரில் பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-01 16:42 GMT
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

தற்போது நீரேற்று நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்மோட்டார் பழுதால் கடந்த சில நாட்களாக கூடலூர் நகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதில் 18 மற்றும் 19-வது வார்டு பகுதிகளான வடக்கு ரதவீதி, ஆசாரிமார் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 9 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இதனால் இந்தப் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி பொறியாளரிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு வடக்குரத வீதியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் ஏதும் செல்லாத வகையில் சாலையின் குறுக்கே கயிறு கட்டினர். 

மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் தண்ணீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படும். என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்