ஜோலார்பேட்டை அருகே ஓடும் லாரியில் வைக்கோல் பாரம் எரிந்து நாசம்
ஜோலார்பேட்டை அருகே ஓடும் லாரியில் வைக்கோல் பாரம் எரிந்து நாசம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நேற்று தனக்கு சொந்தமான லாரியில் குடியானகுப்பம் பகுதியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். குடியானகுப்பம் அருகே சென்றபோது வைக்கோல் பாரம் மீது மின் கம்பி உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் பாரம் தீப்பற்றி எரிந்தது.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் லாரியில் தீப்பிடித்து எரிவது குறித்து டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த வைக்கோல் பாரத்தை கிழே தள்ளி தீயை அணைக்க முயன்றார்.
ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
லாரியில் தீ பிடிக்காமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் வைக்கோல் பாரம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.