மணல் குவாரியை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
புதுப்பேட்டை அருகே மணல் குவாரியை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை அருகே எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் மாட்டு வண்டிகளுக்கு முறையாக மணல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள், குவாரில் மணல் வழங்காத காரணத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு மணல் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று மணல் குவாரி முன்பு மாட்டு வண்டிகளுடன் ஒன்று திரண்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் அவர்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள், பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சந்திரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள், எங்களுக்கு மணல் வழங்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனகூறி அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.